Tuesday, May 12, 2009

என் தமிழே! இவர்களின் கூட்டத்திலா?

சிறுத்தையொன்று
சிறுநரியானதால்
கொழுத்த ஓநாய்களுக்கு
இங்கே
கொண்டாட்டம்!

ஆச்சாணியில்லா
அரக்குத் தேரில்
முரட்டு
ஊர்வலம்!

பொதுச் சேவைப் போர்வைக்குள்
வெடி குண்டு மூட்டைகளை
தவப்பெட்டிகளாய் -
தாங்கி நடக்கும்
கபட சந்யாசக் கூட்டம்!

தளிர்களைத் தள்ளிவிட்டு
வேர்களுக்கு விழாயெடுக்கும்
சந்தர்ப்பவாத
சாக்கடைகள்!

போர்க்களம் செல்லாமலே
புண்களுக்கு
மருந்து பூசும்
பொய்யான சூரர்கள்

மனங்களை வேகவிட்டு
பணங்களை
எண்ணத்துடிக்கும்
சுயநலக் குள்ள நரிகள்!

உழைக்காமல்
ஸ்தானம் தேடி
உயிர்பதவியில் அமர்ந்து கொண்டு
சளைக்காமல் பொய் பேசும்
சதிகாரக் கூட்டங்கள்!

எடுபிடி வேலைக்காய்
எம் போன்றோரை அமர்த்திவிட்டு
கொடி தாங்கும் வாகனங்களில்
சட்டைக் காலர்களை
உயர்த்தி உட்காரும்
யோக்கியர்கள்!

அன்னைத் தமிழே!
இவர்களின் கூட்டத்திலா
இத்தனை நாளும்
என்னை நீ
அலையவிட்டாய்?

Tuesday, April 28, 2009


மணவாழ்க்கைச் சட்டம்!

இள மனங்களைக்
கேட்க்காமலே
இங்கு
திருமணங்கள்
நடத்தப்படுகின்றன!

இருவரின்
இதய அபிலாசைகள்
புதை குழிக்குள்
புகுத்தப்படுகின்றன!

வேகும் தீயின் முன்னே…
அய்யர் ஓதும்
வேதத்தின் வேகத்தில்
வேதனைகளை மறைத்துக் கொண்டு
மாலைகள்
மாற்றப்படுகின்றன!

முடிந்துண்டு விலங்கால்
விரல்கள்
பூட்டப்பட்டு
இல்லறக் கைதிகளாய்
மணவறை வலம்
கட்டாயமாகின்றது!

அக்கினி சாட்சியாய்
இருவரை
சமுதாயம்
ஆயுட் கைதிகளாய்
ஆக்கி விட்டது!

ஏமாந்த மனங்களில்
ரணவேதனை!
இருந்த போதும் -
உலகிற்கு
சொர்க்கப்படம்
காட்டப் படுகிறது!

வேம்பாக மாறிய
வேளையிலும்
பால் - பழச் சடங்கு
பறிமாற்றம் நடக்கிறது!

ஓரிலையில்
அமர்ந்த போதும்
இருவரின்
இதயப் பயணங்களும்
வேறு வேறு பாதையில்த்தான்!

கட்டாயத் திருமணங்கள்
காலத்தால் -
உடைக்கப்பட வேண்டும்!
இன்னாரை இன்னார்
இனங்கண்டு
மனம் உவந்து
ஏற்றுக் கொள்ளும் மணவாழ்க்கை
சட்டமாக மாற வேண்டும்.
அதைச் சமுதாயத்
திட்டமாக ஏற்க வேண்டும்!


Tuesday, March 3, 2009



அமைதியைத்தேடு

வடக்கே இமயமலை
தெற்கே குமரிமுனை!
இடையில் பல பிரிவினை!
இது தான் இன்றைய நிலை!

ஆட்சியைப் பிடித்தவன் ஆட்டத்திலே
ஓட்டைப் போட்டவன் வாட்டத்திலே!
குற்றம் சொன்னவன் சிறைக்குள்ளே
தப்பைக் கண்டவன் தலையில்லே!

ஜாதியின் பெயரால் சண்டையங்கு
சட்டம் இருந்தும் பயனில்லே!
அமைதியை தேடா மனிதரில்லே
அது தான் யாருக்கும் கிடைக்க வில்லே!

விதியைக் காக்க பஞ்சாயத்து
வெறியுடன் தாக்க பஞ்சாப்பு!
இலங்கையில் தமிழர்கள் கசாப்பு
எங்கம் அமைதி போயாச்சு!

நேற்றைய நண்பன்
இன்றைய பகைவன்!
நாளைய மனிதன்
புரியா ஒருவன்!

மீண்டும் காலம் மாற வேண்டும்
அமைதி விரும்பிகள் ஆள வேண்டும்!
தூங்கும் இளைஞர் விழிக்க வேண்டும்
தூக்கியே பாரதத்தை நிறுத்த வேண்டும்!

Thursday, February 5, 2009


வரதட்சணைக்கயவர்கள்!

கோடுபோட்டு வாழ்ந்த
குடும்பத்தை -
கூறு போட வந்த
கோட்டான்கள்!

கன்னியின் பெயரைக் கேட்டு- அவளின்
கல்வித்தகுதியையும் கேட்டு
ஆடச் சொல்லி
பாடச் சொல்லி
இன்னும் பல
நாடகம் நடத்தி
பெண்பார்க்கும் படலம்
அரங்கேறுகிறது!

மெய்ப்பொருத்தம்
இல்லையென்றாலும்
காசுக்காக -
பொய்பொருத்தம்
ஏற்றுக்கொள்ளப்படுகிறது!

ஏதுமறியா
இளம் பெண்களை
கயவர்கள் -
கட்டிக் செல்கினறனர்
அவர்களை
காலமெல்லாம்
கண்ணீர்ப் பெண்களாக்க!

பெண் பார்க்கும் படலத்தின்
அன்றைய அரங்கேற்றம்
அப்பப்பா!
கயவர்கள் -
கையில் சிக்கியபின்
எத்தனையெத்தனை
ஆர்ப்பாட்டம்!

ஜீவனுள்ள போதே
இலவசச் செலவில்
கன்னியர்க்கு
மரணத்தைக் காட்டுகின்றனர்!

மாமியார் என்ற
சர்வாதிகாரிக்கும்
கணவனென்ற
கையாலாகதவனுக்கும்
வரத்டசணையென்ற
வரிப் பணத்திற்கும்
அடிமையாகி
ஐயகோ!
கன்னியர் படும் துயரம்
கணக்கிலடங்கா!

ஆணுக்கும் பெண்ணுக்கும்
சம உரிமை
அது
படுக்கையறையில் மட்டுமே!
ஐந்து நிமிடங்கள் கழிந்தால்
அந்தோ…
அவ்வுரிமையும்
பறிபோகிறது!

தூ...
மடையர்களே!

உங்களை
ஆணென்று
சொல்ல -
ஆண்மையுள்ளவனென்று நினைக்க
உங்களுக்கே
வெட்கமாயில்லையா?

ஏ! கண்ணா!
இந்தக் கயவர்களையெல்லாம்
அழகே இல்லா
அரக்கிககளாய் மாற்றிவிடு!
அப்படியாவது
இவர்களுக்கு
புத்தி வரட்டும்!

ஏ! பாரதியே!
'மாந்தராய்ப் பிறப்பதற்கு - நல்ல
மாதவம் செய்ய வேண்டும்'
என்றிரே?
இப்போது
மாந்தராய்ப் பிறப்பவரெல்லாம்
மாபாபம்
செய்தவரய்யா....

ஏ! இளைய சமுதாயமே!
காலத்தைப் போல்
உன்
கருத்தையும் மாற்றிக்கொள்!

வரதட்சணைத்
தணலிலி வாழும்
இளங்கொடிகளுக்காக
உன்
உறுதித் தேரை
அருகே நிறுத்து!

அப்படியாவது
கன்னிக்கொடிகள்
உங்களை
பின்னி வளரட்டும்!

கலப்புத்திருமணம்
என்ற
கலப்பையால்
ஆழ உழுது
வரதட்சணைக்களை
வேறோடு
உழுது எறி!

உன் வாழ்க்கை
நீ வாழத்தான்.
இன்றே
உறுதி செய்!
நடுத்தர வர்க்கத்தை
அமைதி செய்!

தற்கொலைகள்
தடுக்கப்படும்!
சகல ஜாதியும்
ஒன்று படும்!


காதல்!
சிந்தை ஒரு மொந்தை - அதில்
(அதில்) கள்ளை நிரப்பு!
கள்ளின் சுவை கவிதை எனச்
சொல்லில் பரப்பு!

முந்தை நீ உண்ட மது
தமிழை நினைத்து
விந்தை இது இல்லையென
கவிதை நடத்து!

சொல்லும் விதம் உந்தன் வினை
சுயமாய்த் தொகுத்து
சொல்லும் ஒரு சொல்லும் - தீச்
சுடராய் நிறுத்து!

உள்ளும் மனம் துள்ளும் விதம்
கொள்ளும் கருத்து
தெள்ளும் தீந் தமிழில் - நீ
சீராய் வகுத்து...
காதல் மது போதை - அதைக்
கருத்தில் தைத்து
மேவும் உன் கவிதை தனை
மேலாய்ப் படுத்து

காவும் கடல் வானம் - மலை
காணும் யாவும்
நாளும் நிலையாகும் புவி
அது போல் 'காதல்'.

பட்டுத் துகில் தொட்டால் சுகம்
அதுவே காதல்!
எட்டுத் திசை பட்டால் - நிதம்
மதுவே காதல்!

வட்டும் தினம் கொட்டும் குளிர்
தட்டும் காதல்!
கிட்டும் சுவை லட்டின் சுகம்
சொட்டும் காதல்!

பேழை வெளி வீசும் ஒளி
முத்தே காதல்!
வாழையடி வாழையென
வளரும் காதல்

ஜாதி மதபேதம் ஒழி
சக்தி காதல்!
மோகமது மோட்சம் பெற
பக்தி காதல்!

வீரம் என தீரம் என
விழைக்கும் காதல்
தாரம் என ஆரம் தர
அழைக்கும் காதல்!

ஜீவன் அது ஜீவன் பெற
சித்தி காதல்!
சித்தர் முதல் பித்தர் வரை
போற்றும் காதல்!

Saturday, January 31, 2009


நலம் வாழ்வோம்!

பரபரப்பான உலகிலே
துருதுருப்பான இளைஞரே!
சுறு சுறுப்பாய் உழைக்கவே
விறுவிறுப்பாய் வாருங்கள்!

அவன் உயர்ந்தான்
இவன் சரிந்தான்
என்ற பேச்சே நமக்கெதற்கு?
நாம் உழைப்போம் நலம் பிழைப்போம்
ஓடி வாருங்கள் தோழர்களே - இனியும்
ஓய்ந்து கிடந்தால் நாம் வீணர்களே!

எட்டிப்பார் வெளியுலகை - நீ
நாட்டிப்பார் உன் உழைப்பை!
வெற்றிக் கனிகள் உன் கையில்
நிச்சயம் வந்து விளையாடும்!

நாட்டை வீட்டை ஒரு போல் உயர்த்த
நண்பர்கள் ஒன்றாய் செயல்படுவோம்!
கோட்டை ஏறி அரசும் அமைத்து
குடிநலம் பேன ஆண்டிடுவோம்!

ஊழல் அற்ற ஒரு சமுதாயம்
உழைக்கும் வர்க்கத்தால் வரவேண்டும்!
யாரும் எதையும் சாதிக்கும் - உண்மை
ஜனநாயகம் உயிர் பெற வேண்டும்!


நாளையும் உரைத்திடு!

உள்ளம் உரைப்பது உண்மையென்றால்
உனக்கு ஏது துன்பமடா?
கள்ளம் இல்லா நெஞ்சினிலே ஊறும்
கருணைக்கு ஏது பஞ்சமடா!

பொல்லா மனிதர் உலக மடா - இதைப்
புரிந்து நீயும் செயல்படடா!
நாளைப் பொழுதும் நிச்சயமே! நீ
நாளையும் உரைத்திடு சத்தியமே!

நேர்வழி சென்றே ஜெயித்திடடா - புவியில்
நெறிகெட்ட மாந்தரைச் சிறையிடடா!
இன்னலில் தவிக்கும் மக்களுக்கு - உன்னால்
இயன்றதைச் செய்திட முனைந்திடடா!

பாரத நாட்டின் தன்மானம் - உன்
நெஞ்சினில் என்றும் நிற்கட்டும்!
தீரனாய் நீயும் வாழ்ந்திடடா - தியாகத்
தீயில் உன்னைச் சுட்டெடடா!

ஒரு தாய் மக்கள் எல்லலோரும் - எனும்
உணர்வை நாளும் வளர்த்திடுவாய்! நீ
இந்தியத் தாயின் இளைய மகன்
என்பதை என்றும் மறவாதே!